Saturday, March 9, 2013

கரையில் வாழும் மீன்கள்..

அன்றொரு நாள்
அதிகாலையில்
செவ்வரியோடிய
தன் கதிர்களை
உலகமெங்கும் பரப்பி
தான் விழித்ததை
பறை சாற்றி கொண்டிருந்தான்,
கதிரவன்...
அந்த கதிரவனின்
கதிர்களை
தாங்கிய கணத்தில்,
தலைவனின் பார்வையில்
நாணி சிவந்து
முகத்தை மறைத்து ஓடும்
தலைவியை போல,
தன் நீரை எல்லாம்
அலைகளாக்கி
தன்னை மறைத்து கொள்கிறாள்,
கடலரசி!!

ரம்மியமனதொரு பொழுது,
அழகாய் ஒரு காதல்,
அமைதியாய் ஒரு விடியல்,
யாவரையும்
மயங்க செய்யும் பொழுது தான்!!
ஆனால்
தோற்று கொண்டிருக்கிறது இந்த பெண்ணிடம்!!
யாரிவள்??
இது எதையுமே
உணராமல்,
உணர முடியாமலோ??

கண்களில்
நலமாய் தான் உள்ளாரோ??
எனும்
கலக்கத்தை, கேள்வியாய் கொண்டு,
இன்றாவது வருவாரா??
எனும்
ஏக்கத்தை, நம்பிக்கையாய் தாங்கி,
பெண்ணாய் பிறப்பெடுத்தமையால்
தன் உணர்வுகளை வெளிகாட்ட மறுத்து,
சமண் செய்ய முயன்றும்
முடியாமல்,
நீர்திரையிட்ட கண்களோடு
"வருந்தாதே கண்ணே!!
உன் வாழ்வை
என்றும் நிறைவாக்க,
உனக்காக நான் வருவேன், உன்னிடம்!!
கலங்காமல் காத்திரு!!"
என கை அசைத்து
சென்ற
கணவனின் நல்வரவுக்காக,
கைகளில் விளக்கை தாங்கி,
காரிருள் மேகத்தை தேடும்
உழவனை போல
தண்ணீர் கரையில்
கண்ணீர் கறை தாங்கி நிற்கிறாள்,
இந்த மீனவ பெண், ஐந்தாவது நாளாக!!

சிங்கள வீரனே!!
கொண்ட கணவனை
மீன் பிடிக்க அனுப்பிவிட்டு
எல்லையை தாண்டி விடுவரோ??
உமது குண்டை தாங்கி விடுவாரோ??
என கரையில் துடிக்கும் மீனாய் 
அல்லல் படும்
எங்கள் பெண்களை பார்!!
உமது வெறியின் தாக்கம் குறையக்கூடும்!!

யார் கொடுத்த உரிமையிது,
இயற்கையை பிரிக்கும் தன்மையதை??
என் மீது
மோதும் தென்றலே,
உனையும் தீண்டுகிறது!!

என்
கால் நனைத்த அலைகளே,
உன் கால்களையும்
வருடி செல்கிறது!!

வாழும் காலம்
உரிமை போராட்டம்
நடத்த மட்டும் அல்ல!!
வாழ்வதற்கும் தான்!!

நீயும் வாழு!!
எங்களையும் வாழ விடு!!
சகோதரராய் வாழ்வோம்!!!

No comments:

Post a Comment