Saturday, March 23, 2013

மணித்துளிகள்...


 நீ இல்லாத
என் நாட்கள்,
மணித்துளிகளாய் அல்ல!!
மரணத்துளிகளாய் நகர்கிறது!!

தமிழ் காதல்....

உன்னிடம் ஓர் நாள்,
உனக்காய்,
"வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்"
என்பதற்கு பதிலாய்,  
"விழி மேல் வழி வைத்து காத்திருக்கிறேன்"
என்றேன்... 
தமிழை கொல்லாதேடி பாவம்!!
என்றாய்..


சமாளிப்பதற்காய்  அவசரமாய்....
"நீ வரும் பாதைகளில்,
என் விழிகளை பதிக்க வில்லையடா!!
உனக்காக
என் விழிகளையே,
பாதையாய் பதித்திருக்கிறேன்!!"
என்றேன்..
"தமிழை கொல்லாதே"
என்றதற்காய்,  இப்படி
என்னை கொள்கிறாயேடி ராட்சஸி!!
என்கிறாய்.... 

Saturday, March 9, 2013

என் கணவன்...


அதிகாலையில்
உன்னை எழுப்பி
சூரியனை தரிசிக்க சொன்னால்,
விடியுமுன்பே
கண்டதாய் கூறுகிறாய்!!
கேள்வியாய் நோக்கினால்,
"உன் கண்களில்"
என்கிறாய்!! 
என்
செல்ல சோம்பேறி கணவா,
உன் சோம்பேறித்தனதிற்க்கும்
காதலையே காரணமாக்கினால்
என்ன செய்வேனடா, நான்?? 
.... 
பூங்காவில், 
பூக்களை  ஆசையுடன்
நான் பார்க்க,
நீயோ முறைக்கிறாய்!!
   "உன் கண்கள்
     விரும்புவது
      நானாக  மட்டுமே
     இருக்க வேண்டும்"
என்கிறாய்...
செல்லமாய்
உன்னை சீண்ட எண்ணி,
"பூக்களுடன் பொறாமையா"
என்றேன்..
அலட்டாமல் நீயோ,
"பூவுக்காக தானே" என்கிறாய்...
உன்னை சேர என்ன தவமடா
செய்து விட்டேன் நான்!!!
.....
செல்லமாய்
சண்டையிடுகையில் ஒரு நாள்,
"வேறு பெண்ணை மணந்திருக்கலாம்" என்றாய்... 
கதவை சாத்தி அழுதேன்!!
நீயோ மென்மையாய்
என் அருகில் அமர்ந்து,
உன் கூர் விழிகளால் எனை பார்த்து,  
"ரோஜாவை விற்று,
அதை விட உயர்ந்ததாய்
எதனை வாங்க முடியும்"
என்கிறாய்...
"உன் மென்மை, வன்மை
இரெண்டும் எனக்கே!!"
பெருமிதமாய் உணர்கிறேன்.... 

ரயில் பயணம்...

அம்மாவின் மடி பயணமாய்
முன் எப்போதும்
தோன்றும்
ரயில் பயணம்,
இன்று
உன் பிரிவில் வெறுக்கிறதடி,
என்றாய்!!
இருந்தும், ஏனடா 
திரும்பவில்லை??
என் பிரிவின்
ஏக்கத்தை
உனக்கு நான் உணர்ததாலோ?? 
தளரவில்லை
என இருந்து விட்டாயோ??
தளரவில்லை தான்!!

ஆனால்,
மடிந்தே விட்டேனடா!!
உன்னாலும் கூட
என்னை தளிர்க்க செய்ய முடியாதபடி!!

விடியல்...


எல்லா
புத்தகத்திலும்
இருக்கும்
முன்னுரை போல,
என்
எல்லா நாட்களுக்கும், விடியலாகிறாய் நீ !!

பிறந்த நாள் வாழ்த்து

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் நிலைத்திருக்க,
ஆதவன்
எழும் நேரத்தில்
எனை எழுப்பினாய்!!
சிணுங்கலாய் நான் பார்க்க,
கெஞ்சலாய் நீ பார்க்கிறாய்!!

செல்ல கோபத்துடன்,
சலுகையாய்
உன் தோல் சாய்ந்து,
கை கோர்த்து நடந்தேன்!!

நிமிடத்தில்
கை விலக்கி
கண் பொத்தினாய்!!
உன் விழிகள்
எனக்காய் பார்க்க,
எதிலோ அமர்த்தி
கை விலக்கினாய்!!

கண் இமைகளை
நான் பிரிக்க,
நம் காதலை கண்ட
ஆதவனோ,
செங்கொலுந்தாகி
மௌனமாய் எழுகிறான்!!

எனை மறந்து
நான் அதை ரசிக்க,
மென்மையாய்
ஊஞ்சல் அசைத்து, ரகசியமாய்
பிறந்த நாள் வாழ்த்து கூறி, புருவம் உயர்த்துகிறாய்,  கேள்வியாய்!!


ஆதவன் விழித்தெழ,
மென்மையாய் ஊஞ்சல் அசைய,
பன்னீர் மரங்கள் பூக்கள் செரிய,
தென்றலாய் நீ வாழ்த்து கூற,
நான் மறுமுறை பிறக்கிறேன்!!

என்ன சொல்ல முடியும் நான்??
கண்மூடி
 உன் தோல் சாய்ந்து,
இந்த நொடி
நீடிக்க பிரார்த்திப்பதை தவிர!! 

கரையில் வாழும் மீன்கள்..

அன்றொரு நாள்
அதிகாலையில்
செவ்வரியோடிய
தன் கதிர்களை
உலகமெங்கும் பரப்பி
தான் விழித்ததை
பறை சாற்றி கொண்டிருந்தான்,
கதிரவன்...
அந்த கதிரவனின்
கதிர்களை
தாங்கிய கணத்தில்,
தலைவனின் பார்வையில்
நாணி சிவந்து
முகத்தை மறைத்து ஓடும்
தலைவியை போல,
தன் நீரை எல்லாம்
அலைகளாக்கி
தன்னை மறைத்து கொள்கிறாள்,
கடலரசி!!

ரம்மியமனதொரு பொழுது,
அழகாய் ஒரு காதல்,
அமைதியாய் ஒரு விடியல்,
யாவரையும்
மயங்க செய்யும் பொழுது தான்!!
ஆனால்
தோற்று கொண்டிருக்கிறது இந்த பெண்ணிடம்!!
யாரிவள்??
இது எதையுமே
உணராமல்,
உணர முடியாமலோ??

கண்களில்
நலமாய் தான் உள்ளாரோ??
எனும்
கலக்கத்தை, கேள்வியாய் கொண்டு,
இன்றாவது வருவாரா??
எனும்
ஏக்கத்தை, நம்பிக்கையாய் தாங்கி,
பெண்ணாய் பிறப்பெடுத்தமையால்
தன் உணர்வுகளை வெளிகாட்ட மறுத்து,
சமண் செய்ய முயன்றும்
முடியாமல்,
நீர்திரையிட்ட கண்களோடு
"வருந்தாதே கண்ணே!!
உன் வாழ்வை
என்றும் நிறைவாக்க,
உனக்காக நான் வருவேன், உன்னிடம்!!
கலங்காமல் காத்திரு!!"
என கை அசைத்து
சென்ற
கணவனின் நல்வரவுக்காக,
கைகளில் விளக்கை தாங்கி,
காரிருள் மேகத்தை தேடும்
உழவனை போல
தண்ணீர் கரையில்
கண்ணீர் கறை தாங்கி நிற்கிறாள்,
இந்த மீனவ பெண், ஐந்தாவது நாளாக!!

சிங்கள வீரனே!!
கொண்ட கணவனை
மீன் பிடிக்க அனுப்பிவிட்டு
எல்லையை தாண்டி விடுவரோ??
உமது குண்டை தாங்கி விடுவாரோ??
என கரையில் துடிக்கும் மீனாய் 
அல்லல் படும்
எங்கள் பெண்களை பார்!!
உமது வெறியின் தாக்கம் குறையக்கூடும்!!

யார் கொடுத்த உரிமையிது,
இயற்கையை பிரிக்கும் தன்மையதை??
என் மீது
மோதும் தென்றலே,
உனையும் தீண்டுகிறது!!

என்
கால் நனைத்த அலைகளே,
உன் கால்களையும்
வருடி செல்கிறது!!

வாழும் காலம்
உரிமை போராட்டம்
நடத்த மட்டும் அல்ல!!
வாழ்வதற்கும் தான்!!

நீயும் வாழு!!
எங்களையும் வாழ விடு!!
சகோதரராய் வாழ்வோம்!!!

Friday, March 8, 2013

காலடி ஓசை...

என்
அருகில் கேட்கும்
ஒவ்வொரு
காலடி ஓசைக்கும்
மனம் பதறுகிறது,
நீயாக
இருக்க கூடாதா
என்றும்... 
நீயாக
இருக்க கூடாதே
என்றும் ...

உன் நினைவுகள்...

உன்னை
மறக்க எண்ணி
விழி மூடினால்,
மூடிய இமைகளுக்குள்
என்னையே நோக்கியபடி
நான்
இமை பிரிக்க காத்திருந்த
உன் கண்களே வருவதாய்!! 

என் பேருந்து பயணங்களில் எல்லாம்
அதிகாலை பேருந்தில்,
காற்று
என் உறக்கத்தை
கலைக்க முயன்று தோற்ற நொடி,
பூங்காற்றாய்
நீ என்னை சீண்டியதும்,
நான் துயில் கலைந்த
நம் முதல் பயணமே
நினைவு வருவதாய்!!


அந்தி மயங்கும் வேளையில்,
ஏதேதோ யோசித்திருந்த பொழுதில்,
அனுமதியின்றி
ஆர்பரிக்கிறது,
அன்றொரு நாள்
கடல் அலைகளின் சத்தத்தில்
நீ
மனம் திறந்து
பேசிய வார்த்தைகள்!!

அவசர கதியிலான
என்
ஒவ்வொரு
ரயில் பயணங்களிலும் கூட,
நீ கையசைத்து
விடை கொடுத்த
நம்
முதல் பிரிவே நினைவாய்!!


 என்
கை பிடித்து
எழும் குழந்தையின்
தீண்டலில் உணர்கிறேன்,
என்
கை கோர்த்த,
உன்
விரல் ஸ்பரிசத்தை!!





சூரியனின்
வருகைக்காய்
காத்திருக்கும் தாமரை போல,
உனக்காகவே
காத்திருக்கும் என்னை,
நீ
உணராமலே போவது
ஏன்??

எங்கும்
நீயே நிறைந்திருக்க,
உன்னை
மறக்க முயன்று
தோற்கிறேன் நான்!!

காத்திருக்கிறேன்

செங்கதிரோனுக்காய்
காத்திருக்கும்
பச்சிளம் தளிர்களை போல,
உன் விருப்பமான
பச்சை பட்டாடை உடுத்தி
காத்திருக்கிறேன்,
உன் வருகைக்காக!!!

நினைவுகள்...


இருளில் மின்னும்
மின்மினிப் பூச்சியின்
வெளிச்சத்தில்,
பயணிக்கும் வழிப்போக்கன் போல,
உன் நினைவுகள் 
தான்,
வழிநடத்துகிறது
என்னை!!
 

தயக்கம்....

நம் பிரிவிற்கு பின்னான,
ஒவ்வொரு
சந்திப்பின் போதும்,
இறுதியில் ஒரு சின்ன தயக்கம்!!
நீ அழைப்பாய்
என நானும்....
நான் வருவேன்
என நீயும்...
இருவருமே
காத்திருக்கிறோம்!!
நம் காதலை சுமந்து கொண்டு!!  

மீராவின் பாடல்...

காலையில் கேட்கும்
குயிலின் இசையில்,
காதலை உணர்ந்தேன்,
இத்தனை நாளாய்!!!
இப்பொழுதோ,
கண்ணனின்
வருகைக்காய் காத்திருக்கும்,
மீராவின் பாடலாய்
கேட்கிறது,
நீயும் எனை போல தானோ??

எதிர்மறை...

மிதிலையின் நாயகியை
மணக்க விரும்பும் நீ,
ஆயர்பாடியை தலைநகரமாய்
கொள்வது ஏன்???

மேகபொம்மை...

அதோ,
வாலில்லா குரங்கு!!
இதோ,
குட்டி கரடி!!
ஆசையாய் நீ
 கை காட்டி விளையாடும் போது
தரையிறங்கி
உன் கை பொம்மையாகவே
விரும்புகிறது,
 மேகங்களும்!!!!
முடியாமல் போவதால் தான்
தன்னையே கலைத்து
மழையாய் பொழிகிறதோ???

தவிப்பு....

பொம்மையை  பறிகொடுத்த 
குழந்தையின் 
நிலையில் தவிக்கிறேன்!!
உன்னை 
ஏற்கவும் முடியாமல்.....
விட்டுத்தரவும் முடியாமல்......

கிறுக்கல்....

சுவரெல்லாம் கிறுக்கிவிட்டு
அம்மாவின் மிரட்டலுக்காய்
சாதுவாய்
தேடி கொண்டிருக்கிறது
குழந்தை!!
கிறுக்கல்களிருந்து
சிங்கத்தையும்!!!
சிறுத்தையையும்!!!

சீண்டல்....

சூரியனின் பார்வையில்
நாணல்கள் நாணத்துடன் தலை கவிழ,
சலசலத்து ஓடும் நீரோடையில்
தன்னவளின் முகம் பார்த்தான்,
ஆதவன்!!
நாணத்தில் சிலிர்த்தன பயிர்கள்!!

தென்றலும்
இதனை ரசிக்கும் வேளையில்
என் ஆதவனுக்காக காத்திருந்தேன் அங்கே!!

சிலமணி தாமதங்களில் நீ வர,
ஊடலாய் தலை கவிழ்ந்தேன்!!
நீயோ
வார்த்தைகளின்றி
என்னருகில் அமர்ந்து,
நீரில் விழும் என் பிம்பத்தை
சீண்டுகிறாய் செல்லமாய்!!!

உன் காதலை கண்டு
ஆதவனே ஒளிந்து கொள்கிறானடா!!!

விருப்பமும்.. வருத்தமும்...

கண்ணீரால் தோய்ந்திருக்கும்
என் இமைகளுக்கு
மட்டுமே தெரியும்....
உன் மீதான
என்
விருப்பமும் .....
வருத்தமும்...

நிழலும்... நிஜமும்...

அந்தி மாலை பொழுதில் ,
மூன்றாம் பிறையாய் நிலவு
எட்டி பார்த்து கொண்டிருக்க,
வெண்தாமரை பூக்கள்
மலர்ந்திருக்கும் குளக்கரையில்,
நம்மை சுற்றியுள்ள
மரங்கள்  எல்லாம்
நிழல்களாய் தெரிய ,
தண்ணீரில் கால் நனைத்து
இருவரும் கதை பேசினோம்!!!


சட்டென்று வந்த
ஆர்பாட்டமான மின்னல்கள் உணர்த்தின!!!
மரங்களெல்லாம் நிஜமென்றும்!!
நீ மட்டுமே
நிழல் என்றும்!!!!


Thursday, March 7, 2013

நிலவின் களங்கம்....

அந்தியும்  பகலும்
தன்னவனின் கதிர்களை
தாங்கியே வாழ்ந்தாலும்
பிரிந்தே வாழ்வதால்
வந்த  வேதனையின்
கண்ணீர் கறைகளோ,
அந்த நிலவின் களங்கமும்????